அம்மா காட்டிய முதல் தோழி
அவ்வப்போது எதிரியும் கூட.....
எனக்கு பிடித்த வண்ணங்களில் பல்லி மிட்டாயும்
பாதி கடித்து கொடுத்த லாக்டோ கிங்குமே
அவள் எனக்காய் கொடுத்த முதல் பரிசாய் இருக்கும் .....
பல்லாங்குழியில் தொடங்கி பட்டாம் பூச்சி பிடிப்பதுவரை
அவள் விளையாட்டுகளில் என்னையும் சேர்த்துகொண்ட
பிரியமான தோழி.....
ஆயினும் டீச்சர் விளையாட்டில் மட்டும் அவளே டீச்சராய்
இருந்ததில் இன்று வரை எனக்கு கோபமே .....
அவளா நானா யார் அழகென்று
எங்கள் வீட்டு மாயக்கண்ணாடி முன் சண்டையிட்டாலும்
சேலை கட்டி வருகையிலே
ஒரு நிமிடம் நானும் ஒத்துக் கொள்ளவே செய்கிறேன்
அவள் அழகி என்று.....
சொப்பு விளையாட்டில்
அத்தனை ருசியாய் மண் சமைத்தவள்
இன்று அம்மாவையும் மிஞ்சி விட்டால் சுவையில்......
எலி பூனையாய் சண்டை இட்டாலும்
இந்த எலியை என்றும்
விட்டு கொடுத்ததே இல்லை
அந்த செல்ல பூனை .....
செய்யும் தவறுகளுக்கு தண்டிக்கையில்
அப்பாவில் பாதியாகிவிடும் அவள்...
அம்மாவின் மறு உருவமாய்
மன்னிக்கவும் செய்கிற தேவதை.....
அவளுக்காய் தேடி அலைந்து வாங்கி கொடுத்த பரிசை விடவும்
அதன் மேல் இருந்த மஞ்சள் ரோஜா
அழகாய் இருக்கிறதென்று சொல்லி
வெறுப்பேற்றவும் செய்யும் கள்ளி அவள் .....
கர்வமும் கொஞ்சம் பொறாமையும்
கண்களில் மின்னும்..
என் தோழிகளெல்லாம்
அவளின் ரசிகையாய் ஆனதில்.....
கை பிடித்து நடந்ததில்லை
தோள் சாய்ந்து கதைகள் பேசியதில்லை
இரவெல்லாம் அரட்டை அடித்ததில்லை.....
ஆயினும் தண்ணீரில் கரைத்த சர்க்கரையாய்
கண்ணுக்கு தெரியாமல்
தித்தித்துக் கொண்டே இருக்கிறது
எங்களுக்கிடையே ஆன நேசம் ....
வெற்றி ♥

No comments:
Post a Comment