20 Aug 2013

கொஞ்சம் நீ... கொஞ்சம் நான்...

வெள்ளை ரோஜா நீ
அவ்வப்போது கோவப்படுகையில்
சிகப்பு ரோஜாவாய்... 

இந்த ஆடை உடுத்துவதால் நீ அழகா இல்லை 
உன்னால் இந்த ஆடை அழகா... 

அடுத்த முறை வரும்போது 
வேப்பிலை கொண்டு வா 
உன்னைப் பார்த்தவுடனே 
எனக்கு பித்து பிடிக்கிறது...

உன்னைப்பற்றி அதிகமாய் நினைக்கும் பொழுதெல்லாம் 
மழை பெய்கிறது...
மழை பெய்யும்போதெல்லாம் உன்னைப் பற்றி 
அதிகமாய் நினைக்கிறேன்...
இனி வானிலை அறிக்கை நானே சொல்லிவிடவா...

காற்றை கொஞ்சம் கண்டித்து வை 
உன் தலை கோத எனக்கு மட்டுமே உரிமை உண்டென்று..

நீ.. நான்.. மழை..
இருவருக்குமாய் மழை பேசியது.. 
வா கொஞ்சம் மழைக்காக நாம் பேசுவோம் மௌனம் முறித்து...




வெற்றி 

15 Aug 2013

சுதந்திரதினம் இன்று

உழைப்பை சுரண்ட ஆங்கிலேயர் இல்லை-
               முதலாளிகள் உண்டு..
ஆதிக்கம் செலுத்த அரசர்கள் இல்லை-
               மத அரக்கர்கள் உண்டு..
குண்டு சப்தங்கள் இல்லை- 
              அவ்வப்போது துப்பாக்கி சப்தங்கள் உண்டு..
ரத்தம் சிந்தும் போர்கள் இல்லை- 
              உயிர் உறைய வைக்கும் பயங்கரவாதம் உண்டு..
விடுதலைக்காய் உயிர் துறக்க தேவையில்லை- 
             ஆனால் ஒரு வாய் சோற்றுக்காய் உயிர் துறக்க நேரிடலாம்..
இனி ஆங்கிலம் மட்டும் அறிவுமொழி இல்லை-
            ஆனால் தேசிய மொழிகள் பேசாமொழிகள் ஆகலாம்..
அயல்தேச பிடியில் நாம் இல்லை-
           ஆனால் வறுமை பிடியில் பலர்.. 
செய் அல்லது செத்துமடிய தேவை இல்லை-
           ஆனால் ஏதும் செய்யவில்லை என்றால் பெண்கள் செத்துமடிய வாய்ப்புண்டு..
சத்தியாகிரகம் தேவையில்லை- 
            ஆனால் சத்தியம் கிரகம் ஆளவே தேவை..
சுதந்திரம் கிடைத்தது இன்று...
             வேண்டும் விடுதலை என்று....??


மழை மழை மழை!!!


இந்த வாசம் மண்ணுடையதா இல்லை மழையினுடையதா..
மண்ணுக்காய் மழை சேர்ப்பித்த வாசமா இல்லை மழைக்காக மண் சேமித்த வாசமா ...
எந்த கணத்தில் இந்த வாசம் வரும்? 
மழை மண் தொடும் தருணமா இல்லை மண் மழை காணும் தருணமோ..




எந்த நல்லவரால் இந்த மழை...  
எந்த நல்லவருக்காக இந்த மழை... 

இன்றைய மழை
குழந்தையின் வேண்டுதலா.. அழுகையா.. 
காதலியின் மழை விடு தூதா...
நண்பனின் பிரிவாற்றாமையா..
காதல் மழையா இல்லை சோக மழையா??? 

13 Aug 2013

அம்மா


எத்தனை கவி பாடினும் வற்றாத தலைப்பு அம்மா..

வெள்ளை குணம்.. 

ரோஜா மனம் இவளுக்கு..

இவளின் அதிக பட்ச குழப்பம் 'நாளை என்ன சமைப்பது' என்பதே..

இவளது பெருங்கவலை என்றும் 'ஒழுங்காய் சாப்பிடவில்லை' 

என்பதாகத்தான் இருக்கும்.. 

intel box ல் நாம் முழ்கி இருக்க 

இவளுக்கு என்றும் idiot box தான் 

பொழுது போக்கு... 

இந்திய அணி வெற்றிக்கு நாம் மகிழ்ந்திருக்க

தோற்ற அணிக்கு வருந்தும் உள்ளம் 

அவளுக்கு மட்டுமே சொந்தம் ...

நமக்காக மட்டுமே இருக்கும் இவளது வேண்டுதல்கள் யாவும் ..

தனக்கென ஏதும் கேளாத இனியவள் அம்மா..

நம்புங்கள் தெய்வம் இப்பொழுதெல்லாம்  

கருவறையில் இருப்பதில்லை...

நாம் கை பிடித்து நடப்பதே  தெய்வத்துடன் தான்...

அம்மாவை போற்றுதும் அம்மாவை போற்றுதும்...


வெற்றி   



பிரியமானவளே


To all those who miss their grandma..

பிரியமானவளே....

ஓயாமல் உன் நினைவுகள் வந்து
என்னை ஓய்வில்லாமல் செய்கிறது ....

காலம் வரைந்த ஓவியமாய் 
உன் தோல் சுருக்கங்கள் 
ஆசையாய் தடவிய 
பாச தருணங்கள் 
இழக்கிறேனடி...
எந்த தலையணையும் 
இன்று வரை தந்ததில்லை 
உன் மடி தந்த சுகம்... 

பாசமாய் தலை கோதி
அழகான கதைகள் சொல்ல 
நீ இல்லையடி...

வெற்றிக் கோப்பைகள் உண்டு
ஆனால்  உன் நெற்றி முத்தங்களுக்கே 
ஏங்குகிறேன் .. 

நிஜத்தில் இல்லாத நீ 
கனவில் மட்டும் தினம் தினம் ...

உன் பிரிவின் சோகம் 
என் தலையணைக்கும் 
நிலவுக்கும் மட்டுமே 
தெரிந்த ரகசியம்....

நேசிப்பவர்களின்  மரணம் என்றும் ரணமே
எனதினியவளே ஏன் எனைவிட்டு பிரிந்தாய்...